குறள் (Kural) - 580
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
பொருள்
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
Tamil Transliteration
Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka
Naakarikam Ventu Pavar.
மு.வரதராசனார்
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.
சாலமன் பாப்பையா
எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.
கலைஞர்
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
பரிமேலழகர்
நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர். (நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர். 'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல். நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது. "முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சு முண்பர் நனிநா கரிகர்" என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.
மணக்குடவர்
நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார். நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.
புலியூர்க் கேசிகன்
விரும்பத்தகுந்த ‘கண்ணோட்டம்’ என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | கண்ணோட்டம் (Kannottam) |