குறள் (Kural) - 579

குறள் (Kural) 579
குறள் #579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

பொருள்
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

Tamil Transliteration
Oruththaatrum Panpinaar Kannumkan Notip
Poruththaatrum Panpe Thalai.

மு.வரதராசனார்

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

சாலமன் பாப்பையா

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

கலைஞர்

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

பரிமேலழகர்

ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது. ('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் -தம்மை வருத்தியொழுகும் இயல்புடையாரிடத்தும் ; கண்ணோடிப்பொறுத்து ஆற்றும் பண்பே தலை - பழைய நட்புக்கருதிக் கண்ணோட்ட முடைய ராய் அவர் குற்றத்தைப் பொறுத்தொழுகும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது. இப்பொருட்கு, இந்தியா சீனாவின் வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக் கொண்டு போவதை எடுத்துக் காட்டாகக் கொள்க. 'பண்பினார் ' என்பது அவர் வழக்கத்தை யுணர்த்திற்று.உம்மை எச்சமும் இழிவுங் கலந்தது. ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் -தம்மால் தண்டித்து அடக்கப்பட வேண்டிய குற்ற முடையாரிடத்தும்; கண்ணோட்டஞ் செய்து அவர் குற்றத்தை பொறுத்து அமையும் இயல்பே தலைசிறந்ததாம். இப்பொருட்கு, இந்தியா பாக்கித்தான் தாக்குதலைப் பொறுத்துக் கொண்டமைவதை எடுத்துக்காட்டாகக் கொள்க. 'பண்பினார்' என்பதும் உம்மையும் மேலனவே. இங்ஙனம் இக்குறட்கு இருவகையாய் உரைப்பதற்குக் கரணியம்,ஒறுத்தல் என்னும் சொல் தண்டித்தல் என்றும் வருத்துதல் என்றும் இருபொருள் தருவதே.

மணக்குடவர்

தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.

புலியூர்க் கேசிகன்

தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கண்ணோட்டம் (Kannottam)