குறள் (Kural) - 577

குறள் (Kural) 577
குறள் #577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

பொருள்
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Kannottam Illavar Kannilar Kannutaiyaar
Kannottam Inmaiyum Il.

மு.வரதராசனார்

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

சாலமன் பாப்பையா

கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

கலைஞர்

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

பரிமேலழகர்

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்- கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை. (கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்- கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர் எப்போதேனும் என்ன கரணியம் பற்றியும் கண்ணோட்ட மில்லாதவராகவும் இரார். காட்சியினாற் கொள்ளும் சிறந்த பயன் இன்மையால் 'கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் ' என்றார். அதை வற்புறுத்தவும் குறள் நிரம்பவும் பின்னும் அதை எதிர்மறை முகத்தாற் கூறினார். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.

மணக்குடவர்

கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.

புலியூர்க் கேசிகன்

கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கண்ணோட்டம் (Kannottam)