குறள் (Kural) - 576

குறள் (Kural) 576
குறள் #576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

பொருள்
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

Tamil Transliteration
Manno Tiyaindha Maraththanaiyar Kanno
Tiyaindhukan Notaa Thavar.

மு.வரதராசனார்

கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா

கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

கலைஞர்

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

பரிமேலழகர்

கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர். ('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்- கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர்- இயங்குதிணையராயினும் நிலைத்திணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரத்தைப் போல்வர். மரமுங் கண்ணோடியைந்து கண்ணோடாமையின் கண்ணோடாதவர்க்கு சிறந்த உவமமாயிற்று. இது வினையுவமை.மரக்கண்ணாவது அதன் கணு."மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்" (முத்தொள்.101). கணுக்கணுவாயிருப்பதால் மூங்கிலுங் கண்ணெனப்படும். புறக்கண் கண்டவழி ஓடுவது அகக்கண்ணேயாயினும் ,வழியாயிருத்தல் பற்றியும் பெயரொப்புமை பற்றியும் பின்னதன் வினை முன்னதன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. கண்ணோடுதல் என்பது ஒரு சொற்றன்மைப்பட்டு முதல் வினையாய் நின்றது.' மரம்' வகுப்பொருமை. மண்ணோடியைந்த மரம் என்பதற்குச் "சுதை மண்ணோடு கூடச்செய்த மரப்பாவை" என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரைத்திருப்பது ஒரு சிறிதும் பொருந்தாது.

மணக்குடவர்

சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.

புலியூர்க் கேசிகன்

கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கண்ணோட்டம் (Kannottam)