குறள் (Kural) - 572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
பொருள்
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.
Tamil Transliteration
Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar
Unmai Nilakkup Porai.
மு.வரதராசனார்
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
சாலமன் பாப்பையா
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.
கலைஞர்
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.
பரிமேலழகர்
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று. (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது -உலக நடை கண்ணோட்டத்தினால் நடைபெற்று வருகின்றது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை-ஆதலால் , அக்கண்ணோட்டம் இல்லாதார் இவ்வுலகத்திலிருப்பது மாநிலத்திற்கு வீண்சுமையேயன்றி ஒரு பயனுமில்லாததாம். உலகியல் என்பது ஒப்புர வொழுகல். அது செய்யாதவன் மக்கட்பிறப்படைந்தும் அதனாற் பயன்பெறாதவனாதலின், 'நிலக்குப் பொறை' என்றார். நிலக்கு என்பதில் அத்துச்சாரியை தொக்கது. இம்மையிற்பிறக்கும் மறுமையில் தமக்கும் பயன் படுமாறு நடந்து கொள்ளாதவர் , இவ்வுலகில் இருப்பதினும் தாம் நுகர்வனவற்றைப் பிறர்க்குப் பயன்படும்படி நுகரவிட்டு விட்டு இறப்பதேமேல் என்பது கருத்து.
மணக்குடவர்
உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம். இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.
புலியூர்க் கேசிகன்
உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | கண்ணோட்டம் (Kannottam) |