குறள் (Kural) - 539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
பொருள்
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham
Makizhchchiyin Maindhurum Pozhdhu.
மு.வரதராசனார்
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.
கலைஞர்
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க. (காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சியால் மயங்கும் போது ; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முன்பு அத்தகைய மயக்கத்தாற் தம் கடமையை மறந்து கெட்டவரை நினைத்துப் பார்க்க. கெட்டாரை நினைக்கவே தமக்கும் வருங்கேட்டிற் கஞ்சித் திருந்துவர் என்பது கருத்து . திருந்துதல் மறவாது கடமையைச் செய்தல் . 'இகழ்ச்சியிற் கெட்டாரை எண்ணுக' என்று பாடமோதுவர் மணக்குடவர் .
மணக்குடவர்
அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது. இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.
புலியூர்க் கேசிகன்
தாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும் போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | பொச்சாவாமை (Pochchaavaamai) |