குறள் (Kural) - 538

குறள் (Kural) 538
குறள் #538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

பொருள்
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

Tamil Transliteration
Pukazhndhavai Potrich Cheyalventum Seyyaadhu
Ikazhndhaarkku Ezhumaiyum Il.

மு.வரதராசனார்

சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

சாலமன் பாப்பையா

உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

கலைஞர்

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

பரிமேலழகர்

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க, செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான். (அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் சான்றோரும் உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும் ; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அவற்றைச் செய்யாது மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லை. அரசர்க்குரிய சிறந்த செயல்கள் ; வரலாற்றிற் கெட்டாத பண்டைக்காலத்திற் பெருங்கடலில் நாவாய்ப் படை செலுத்திச் சாலித்தீவைக் கைப்பற்றியமை , தூங்கெயிலெறிந்தமை , முக்கழகம் நிறுவியமை , மகனை முறை செய்தமை , சீன நாட்டினின்று கரும்பைக் கொணர்ந்து பயிரிட்டமை , பாரதப்போர்ப்படை யிரண்டிற்கும் பதினெண்ணாளும் பெருஞ்சோறு வழங்கியமை , ஓரிளைஞன் இருபெருவேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்றமை , முரசு கட்டிலில் துயின்ற புலவனுக்குக் கவரி வீசியமை , பரிசிலனுக்குத் தலையீந்தமை , காவிரியணைகட்டியமை , பேரேரியுங் கிளையாறும் வெட்டியமை , தமிழ்வேந்தரை யிகழ்ந்த வடநாட்டரசரை வென்று பத்தினிக்குப் படிமை நிறுவியமை , வானளாவுங் கோபுரம் எடுத்தமை , துறைநகரமைத்துக் கடல் வாணிகம் பெருக்கியமை போன்றனவும் பிறவுமாம் . 'எழுமை' தொகைக் குறிப்பு . "சாதிதருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கு உள்ளது நிரயத்துன்பமே" என்று பரிமேலழகர் கூறிய ஆரியக்குறிப்பு இங்கு ஏற்காது.

மணக்குடவர்

உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும். இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான். இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பொச்சாவாமை (Pochchaavaamai)