குறள் (Kural) - 493

குறள் (Kural) 493
குறள் #493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

Tamil Transliteration
Aatraarum Aatri Atupa Itanarindhu
Potraarkan Potrich Cheyin.

மு.வரதராசனார்

தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.

சாலமன் பாப்பையா

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

கலைஞர்

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

பரிமேலழகர்

ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின். ('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இடன் அறிந்து போற்றி - தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் காத்துக் கொண்டு , போற்றார்கண் செயின் - பகைவரொடு போர்வினை செய்வராயின் ; ஆற்றாரும் ஆற்றி அடுப - வலிமையில்லாதவரும் வலிமையராகி வெல்வர் . தம்மைக் காத்தல் , பகைவரால் , துன்பம் தோல்வி கேடுகள் வராமல் அரணாலும் படையாலும் தம்மைக் காத்துக் கொள்ளுதல் . தம்மை என்பதும் போர்வினை என்பதும் அவாய் நிலையான் வந்தன . உம்மை இழிவு சிறப்பு .

மணக்குடவர்

வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.

புலியூர்க் கேசிகன்

தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இடனறிதல் (Itanaridhal)