குறள் (Kural) - 492

குறள் (Kural) 492
குறள் #492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

பொருள்
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

Tamil Transliteration
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum.

மு.வரதராசனார்

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

கலைஞர்

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

பரிமேலழகர்

முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். (மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலிமையோர்க்கும் ; அரண்சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்ததனாலுண்டாகும் மேம்பாடு பல நலங்களையும் தரும் . மாறுபாடாவது மாநிலம் எல்லார்க்கும் பொதுவென்னும் பகைவர் சொல்லைப் பொறாத அரசர் மனத்திலெழும் வயிரம் . மாறுபாடும் வலியும் ஒருங்கே கூறியதனால் , இது பகைமேற்சென்ற வல்லரசர் செயலாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு . அரண் , ஆறும் மலையும் போல் இயற்கையும் , அகழியும் மதிலும் போற் செயற்கையும் ஆக இருவகைப்படும் . ஆக்கம் வலிமேம்பாடு . அது தரும் நலங்கள் பகைவரால் தமக்குத் தாக்குதலின்மையும் தாம் நிலையூன்றி அவரைத்தாக்கி வெல்லுதலுமாம் .

மணக்குடவர்

பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இடனறிதல் (Itanaridhal)