குறள் (Kural) - 465

குறள் (Kural) 465
குறள் #465
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

பொருள்
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

Tamil Transliteration
Vakaiyarach Choozhaa Thezhudhal Pakaivaraip
Paaththip Patuppadho Raaru.

மு.வரதராசனார்

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

சாலமன் பாப்பையா

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

கலைஞர்

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

பரிமேலழகர்

வகை அறச் குழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல், பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம். (அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வகை அறச் சூழாது எழுதல் - அரசன் தன் பகைவரை வெல்லுதற்கேற்ற வழிகளை யெல்லாம் தீர எண்ணாது, அரை குறையாய் எண்ணிய வளவில் அவர்மேற் படையெடுத்துச் செல்லுதல் ; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரைப்பாதுகாப்பான நிலைமையிலிருந்து மேலும் வலியுறச் செய்வதொரு நெறியாம் . வெல்வதற் கேற்ற வழிகளாவன ; வலியிடங் காலம் முதலியவற்றொடு பொருந்த வெட்சி தும்பை யுழிஞை யென்னும் மூவகைப் போர் முறைகளும் , படைவகுப்பு வகைகளும் , தாக்குங் காலமும் , பகைவர் எதிர்த்துப்பொரினும் தற்காத்து நிற்பினும் தான் செய்ய வேண்டிய வினைகளும் கையாளும் வலக்காரங்களும் , படைத்தலைவர் தொடரும் வரிசையும் , வெற்றியால் விளையும் பயனும் முதலாயின . இவற்றுள் ஒன்று குறையினும் வினைகெடுமாதலின் , வகையறச் சூழ்தல் வேண்டு மென்றார் . 'பாத்திப்படுப்பது' என்பது குறிப்புருவகம் . வினைத்திறங்களை யெல்லாம் முற்றவெண்ணாது சென்று பொருது தோல்வியுறுவது பகைவரை வலுப்படுத்தவே செய்யுமாதலால் , அது மேற்கொண்டு செழித்து வளர முடியாவாறு அடர்ந்திருக்கும் நாற்றுக்களைப்பறித்துப் பாத்தியுள் இடைவிட்டு நட்டு , நன்றாய் வளரச் செய்தலை யொக்கும் என்றார்.

மணக்குடவர்

மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி. இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒரு செயலைப் பற்றி எல்லாவகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai)