குறள் (Kural) - 463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
பொருள்
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
Tamil Transliteration
Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai
Ookkaar Arivutai Yaar.
மு.வரதராசனார்
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.
கலைஞர்
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
பரிமேலழகர்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார். ('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - உறுதியற்ற எதிர்கால வூதியத்தை நோக்கி இருப்பிலுள்ள முதலையும் இழத்தற்கேதுவான முயற்சியை; அறிவு உடையார் ஊக்கார் - அறிவுடையோர் மேற்கொள்ளார். ஊதியத்தையன்றி முதலையும் இழக்கும் செய்வினை, வலியுங் காலமும் இடமு மறியாது பிறன் நாட்டைக் கைப்பற்றச் சென்றுதன் நாட்டையும் இழத்தல் போல்வது. 'செய்வினை' செய்தறிந்த வினை அல்லது செய்யத் தொடங்கிய வினை. பின்னைப் பொருட்கு ஊக்குதல் மேலுஞ் செய்யத்துணிதல். எச்ச வும்மை செய்யுளால் தொக்கது.
மணக்குடவர்
தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார். இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.
புலியூர்க் கேசிகன்
வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒரு போதும் மேற்கொள்ள மாட்டார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) |