குறள் (Kural) - 461

குறள் (Kural) 461
குறள் #461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

பொருள்
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

Tamil Transliteration
Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum
Oodhiyamum Soozhndhu Seyal.

மு.வரதராசனார்

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

கலைஞர்

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

பரிமேலழகர்

ழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க. (உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அழிவதும்-வினைமேற்கொள்ளும் போது அன்று அதனால் அழிவதையும்; ஆவதும் -அழிந்தாற்பின் ஆவதையும்; ஆகி வழிபயக்கும் ஊதியமும் -வினை முடிந்தபின் தொடர்ந்து வரும் ஊதியத்தையும் ; சூழ்ந்து செயல் -ஒப்பு நோக்கி ஆராய்ந்து தக்கதாயின் செய்க, தகாததாயின் விட்டு விடுக. தக்கதாவது, அற்றைச் செலவினும் வரவுமிக்குப் பிற்றை வரவு முள்ளது; அல்லது அற்றை வரவு செலவொத்துப் பிற்றை வரவுள்ளது; அல்லது அற்றை வரவினுஞ் செலவு மிக்குப் பிற்றைப் பெரு வரவுள்ளது; அல்லது பிற்றை வரவின்றி அற்றைச் செலவினும்வரவு மிக்கிருப்பது. தகாததாவது, பிற்றை வரவின்றி அற்றை வரவு செலவொத்தோ வரவினுஞ் செலவுமிக்கோ இருப்பது; அல்லது அற்றை வரவினுஞ் செலவுமிக்குப் பிற்றைச் சிறுவரவுள்ளது. 'அழிவதூஉம்' 'ஆவதூஉம்' இன்னிசை யளபெடைகள்.

மணக்குடவர்

வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்

புலியூர்க் கேசிகன்

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்னரே செய்ய வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai)