குறள் (Kural) - 460

குறள் (Kural) 460
குறள் #460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

பொருள்
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

Tamil Transliteration
Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin
Allar Patuppadhooum Il.

மு.வரதராசனார்

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

சாலமன் பாப்பையா

ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

கலைஞர்

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

பரிமேலழகர்

நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை. (ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நல் இனத்தின் ஊங்கும் துணையும் இல்லை - ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் சிறந்த துணையுமில்லை; தீ இனத்தின் (ஊங்கு ) அல்லல் படுப்பதும் இல் -தீயினத்தினும் மிகுதியாகத் துன்புறுத்துவதும் இல்லை. நல்வழியிற் செலுத்தி இன்புறச் செய்வதால் நல்லினத்தைத் துணையென்றும், தீய வழியிற்போக்கித் துன்புறச் செய்வதால் தீயினத்தைப் பகை யென்றும், கூறினார். அல்லற்படுத்துவது பகையே. ஐந்துனுருபுகள் தமக்குரிய உறழ்பொருளின் கண் வந்தன. உம்மை பிரித்துக் கூட்டப் பட்டது. 'படுப்பதூஉம்' இன்னிசையள பெடை.

மணக்குடவர்

நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தை விட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai)