குறள் (Kural) - 454

குறள் (Kural) 454
குறள் #454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

பொருள்
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

Tamil Transliteration
Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu.

மு.வரதராசனார்

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா

அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

கலைஞர்

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

பரிமேலழகர்

அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் . (மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு் புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர்

அறிவு -மேற்கூறிய சிறப்பறிவு; ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவனுக்கு அவன் மனத்தின் கண்ணேயுள தாவதுபோல் தன்னைத் தோற்றுவித்து; இனத்து உளது ஆகும் - உண்மையில் அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உண்டாவதாம். மனத்துண்டாவது போலத் தோன்றுதல் வெளித்தோற்மேயன்றி உண்மையான தன்றென்பதைக் குறிக்கக் 'காட்டி' என்றார். அதனையும் இறந்த காலத்திற் குறித்தது அது அங்ஙனந் தோன்றியது ஆராய்ந்து பார்க்குமுன் என்பதை உணர்த்தற்கே. ஒருவர் எவ்வினத்தொடுங் கூடாமல் தனிவாழ்க்கையே மேற்கொண்டிருப்பினும், அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லப்படுவதற்கு, ஏற்கெனவே பிள்ளைப்பருவத்திலிருந்து பெற்றோரும் உற்றோரும் மற்றோருமாகப் பற்பலர் தம் சொல்லாலுஞ் செயலாலும் அவர் உணர்வைச் சிறிதுசிறிதாக மாற்றியிருப்பதே கரணியம் என அறிக.

மணக்குடவர்

ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.

புலியூர்க் கேசிகன்

ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தை யொட்டியதாகவே அறிவு உண்டாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai)