குறள் (Kural) - 453

குறள் (Kural) 453
குறள் #453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

பொருள்
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.

Tamil Transliteration
Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam
Innaan Enappatunj Chol.

மு.வரதராசனார்

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

சாலமன் பாப்பையா

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

கலைஞர்

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.

பரிமேலழகர்

மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம் இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம். (இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்' மனத்தான் ஆம் என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் -மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டாகும்; இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் -ஆயின், இவன் இத்தன்மையனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும். கரணம் கருவி. இயல்பாக ஒரே தன்மையிலுள்ள மழைநீர் நன்னீ ரென்றும் உவர் நீரென்றும் வேறுபடுத்திச் சொல்லப் படுவதற்கு, அது சேர்ந்துள்ள நிலமே கரணியமாவதுபோல், இயல்பாக ஒரே தன்மையரான மாந்தரும் நல்லவரென்றும் தீயவரென்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுவதற்கு, அவர் சேர்ந்த இனமே கரணிய மென்பது கருத்து.

மணக்குடவர்

மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம். இது பிறரால் பழிக்கப்படுமென்றது.

புலியூர்க் கேசிகன்

மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இவன் இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai)