குறள் (Kural) - 427

குறள் (Kural) 427
குறள் #427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

பொருள்
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

Tamil Transliteration
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar.

மு.வரதராசனார்

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

சாலமன் பாப்பையா

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

கலைஞர்

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

பரிமேலழகர்

அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் -அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர். முன்னறிதல் எண்ணியறிதலும் எண்ணாதறிதலும் என இருவகை. எண்ணியறிதல் பொதுவகைப்பட்ட அறிஞர் செயல்; எண்ணா தறிதல் இறைவனால் முற்காணியர்க்கு (Prophets) அளிக்கப் பட்ட ஈவு. "பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்" என்று மணக் குடவபரிப்பெருமாளரும் , "அறிவுடையவர் ஆகும் காரியம் அறிவார்". என்று பரிதியாரும், "உலகத்து அறிவுடையோர் ----------- தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவாரே." என்று காளிங்கரும், உரைப்பர். தமக்கு நன்மையாவதை அறிவது தன்னல வியல்பேயன்றி அறிவுடைமையாகாது.

மணக்குடவர்

பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர். இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர்; அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)