குறள் (Kural) - 426

குறள் (Kural) 426
குறள் #426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

பொருள்
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

Tamil Transliteration
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu
Avva Thuraiva Tharivu.

மு.வரதராசனார்

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

கலைஞர்

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

பரிமேலழகர்

உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம். உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.

மணக்குடவர்

யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

புலியூர்க் கேசிகன்

உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)