குறள் (Kural) - 419

குறள் (Kural) 419
குறள் #419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

பொருள்
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

Tamil Transliteration
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu.

மு.வரதராசனார்

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

சாலமன் பாப்பையா

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

கலைஞர்

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

பரிமேலழகர்

நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது. (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நுணங்கிய கேள்வியர் அல்லார் -நுண்ணிதாகிய கேள்வியறி வில்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது-பணிவான சொற்களையுடைய ராதல் இயலாது. பொருளின் நுண்மை கேள்விமேலும் சொல்வார் பணிவு வாயின் மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. கேள்வி என்பதைக் கேள்வியறி வென்று கொள்ளின் ஏற்றுரை வழக்காகாது. 'வாய்' ஆகுபெயர். கேள்வி வாயிலாக அறிவு நிரம்பாதார் செருக்கித் தற்புகழ்ச்சி செய்வர் என்பது கருத்து. 'அல்லால்' என்பது பாடவேறுபாடு.

மணக்குடவர்

நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.

புலியூர்க் கேசிகன்

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கேள்வி (Kelvi)