குறள் (Kural) - 383

குறள் (Kural) 383
குறள் #383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

பொருள்
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

Tamil Transliteration
383 Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum
Neengaa Nilanaan Pavarkku.

மு.வரதராசனார்

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

சாலமன் பாப்பையா

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

கலைஞர்

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

பரிமேலழகர்

நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)

ஞா.தேவநேயப் பாவாணர்

நிலன் ஆள்பவற்கு - நாட்டையாளும் அரசனுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா - அரசக்கருமங்களை விரைந்து செய்யுந்தன்மையும் அவற்றை யறிதற்கேற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும். கல்வியறிவினால் வினை வெற்றியாக முடியும் வகை தீர்மானிக்கும் திறமும், துணிவினால் தீர்மானித்ததை நெஞ்சுரத்துடன் நிறைவேற்றுவதும், தூங்காமையால் உரியகாலத்தில் தொடங்கி முடிப்பதும், கூடும் என்பதாம். இவற்றுட் கல்வி ஏழுறுப்புக்களையும் நோக்கியது. ஏனையிரண்டும் வினைக்குரியன. உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

மணக்குடவர்

மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

புலியூர்க் கேசிகன்

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இறைமாட்சி (Iraimaatchi)