குறள் (Kural) - 382

குறள் (Kural) 382
குறள் #382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

பொருள்
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.

Tamil Transliteration
Anjaamai Eekai Arivookkam Innaankum
Enjaamai Vendhark Kiyalpu.

மு.வரதராசனார்

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

சாலமன் பாப்பையா

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

கலைஞர்

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளைஎட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.

பரிமேலழகர்

வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வேந்தற்கு இயல்பு-அரசனுக்கு இயல்பான தன்மையாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை-அஞ்சாமையும் கொடைத்தன்மையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் குறையாதிருத்தலாம். இவற்றுள் அறிவு ஏழுறுப்புக்களையும், ஈகை படையையும் குடியையும் நோக்கியனவாம். ஏனையிரண்டும் வினைக்குரியனவாம். ஊக்கம் என்பது வினைசெய்தற்கண் உண்டாகும் மனவெழுச்சி. இவற்றுள் ஒன்று குறையினும் பகையினாலேனும் படையினாலேனும் குடியினாலேனும் கேடுநேருமாகலின், 'எஞ்சாமைவேந்தற்கியல்பு' என்றார். வள்ளுவர் காலத்தமிழகம் மூவேந்தராட்சிக் குட்பட்டதாகலின் அரசன் வேந்தன் எனப்பட்டான். முடியணியும் உரிமையுடைய சேர சோழ பாண்டியர் மூவரே வேந்தர். வேய்தல் முடியணிதல். வேய்ந்தான்-வேந்தன். உம்மை முற்றும்மை.

மணக்குடவர்

அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

புலியூர்க் கேசிகன்

அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இறைமாட்சி (Iraimaatchi)