குறள் (Kural) - 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
பொருள்
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
Tamil Transliteration
Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel
Thavaaadhu Menmel Varum.
மு.வரதராசனார்
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
சாலமன் பாப்பையா
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
கலைஞர்
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
பரிமேலழகர்
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் -அவா இல்லாதார்க்கு அதனால் வருந்துன்பமுமில்லை; அஃது உண்டேல் தவா அது மேல்மேல் வரும் - அது இருப்பின் ( அது உள்ளவர்க்கு ) அதனால் எல்லாத்துன்பங்களும் விடாது வந்துகொண்டேயிருக்கும். அவாவுள்ளவர்க்கு வருவன தன்னாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் வரும் மூவகைத்துன்பங்களுமாம். 'தவாஅது' இசை நிறையளபெடை.
மணக்குடவர்
ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.
புலியூர்க் கேசிகன்
அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அவா அறுத்தல் (Avaavaruththal) |