குறள் (Kural) - 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
பொருள்
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
Tamil Transliteration
Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin.
மு.வரதராசனார்
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சாலமன் பாப்பையா
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
கலைஞர்
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
பரிமேலழகர்
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது. (துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது'என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது - அவர் வீடு பெற்ற பின்பு மட்டுமன்றி அதற்கு முன்பு இங்கு உடம்போடு நின்ற விடத்தும் இன்பம் இடைவிடாது தொடரும். துன்பத்துள் துன்பமாவது, பிறதுன்பங்களெல்லாந் துன்பமாகத் தோன்றாவாறு பொறுக்குந்தன்மை யற்ற துன்பம். அவாவினாலுண்டாகுந் துன்பத்தை அவாவென்னுந் துன்பமென்று கரணகத்தைக் கருமகமாகச்சார்த்திக் கூறினார். பரம்பொருளொடு உள்ளத்தாற் கூடுதலே பேரின்பமாகலின், அவாவறுத்து அங்ஙனஞ் செய்தார் உடம்போடு கூடிநின்றவிடத்தும் அவ்வின்பந்துய்ப்பர் என்பது இங்குக் கூறப்பட்டது.
மணக்குடவர்
அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.
புலியூர்க் கேசிகன்
அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அவா அறுத்தல் (Avaavaruththal) |