குறள் (Kural) - 367

குறள் (Kural) 367
குறள் #367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

பொருள்
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

Tamil Transliteration
Avaavinai Aatra Aruppin Thavaavinai
Thaanventu Maatraan Varum.

மு.வரதராசனார்

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா

ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

கலைஞர்

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதை முற்றுங் கெடுக்க வல்லனாயின்; தவா வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - அவன் கெடாமைக் கேதுவாகிய வினை அவன் விரும்பியவாறே உண்டாகும். கெடாமை பிறவித்துன்பங்களால் அழியாமை. அதற்கேதுவாகிய வினை மேற்கூறிய துறவறங்கள். 'வினை' வகுப்பொருமை. விரும்பியவாறாவது துன்பமில்லாதவகை.

மணக்குடவர்

ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.

புலியூர்க் கேசிகன்

அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அவா அறுத்தல் (Avaavaruththal)