குறள் (Kural) - 35

குறள் (Kural) 35
குறள் #35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

Tamil Transliteration
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram.

மு.வரதராசனார்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

சாலமன் பாப்பையா

பிறர்
மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும்
போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும்
விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

கலைஞர்

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

பரிமேலழகர்

அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அழுக்காறு - பிறராக்கம் பொறாமையும்; அவா - அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும்; வெகுளி - அதைப் பெறாதவிடத்து எழும் சினமும்; இன்னாச் சொல் - அது பற்றிவருங் கடுஞ்சொல்லும்; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - ஆகிய இந் நான்கையும் விலக்கி நடந்ததே அறமாவது. (இழுக்கா = இழுக்கி )

மணக்குடவர்

மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)