குறள் (Kural) - 36

குறள் (Kural) 36
குறள் #36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பொருள்
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

Tamil Transliteration
Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu
Pondrungaal Pondraath Thunai.

மு.வரதராசனார்

இளைஞராக
உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய
வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா

முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

கலைஞர்

பிறகு
பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது
ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

பரிமேலழகர்

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர்

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம். இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும் அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோடொன்றி நின்று உதவுவதால், பொன்றாத்துணையாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரியரின் அன்பார்ந்த அறிவுரை.

மணக்குடவர்

பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத துணையாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)