குறள் (Kural) - 34

குறள் (Kural) 34
குறள் #34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

பொருள்
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

Tamil Transliteration
Manaththukkan Maasilan Aadhal Anaiththu Aran
Aakula Neera Pira.

மு.வரதராசனார்

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா

மனத்து
அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை
நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும்
ஆடம்பரங்களே.

கலைஞர்

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

பரிமேலழகர்

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய;(குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர - மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன. மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்குமாதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாததாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயுமிருத்தலின், இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக் கோலத்தை வீண் ஆரவாரமென்றார். 'ஆதல்' வியங்கோளுமாம்.

மணக்குடவர்

ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.

புலியூர்க் கேசிகன்

தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)அறன் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)