குறள் (Kural) - 340

குறள் (Kural) 340
குறள் #340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

பொருள்
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

Tamil Transliteration
Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku.

மு.வரதராசனார்

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

சாலமன் பாப்பையா

உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.

கலைஞர்

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

பரிமேலழகர்

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - பலவேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக்கட்கும் வாழிடமாகிய உடம்புகளுள் நெடுகலும் ஒண்டுக்குடியிருந்தே வந்த உயிருக்கு; புக்கில் அமைந் தின்று கொல்-நிலையாக வதியத்தக்க ஒர் உறையுள் இதுகாறும் அமையலில்லை போலும்! துஞ்சு+இல்=துச்சில்=ஒதுக்கிடம். புகு+இல்=புக்கில்=புகுந்து பின் நீங்காத நிலையான இருப்பிடம். புக்கில் அமைந்ததாயின் வெளியேறியிரா தென்பதாம். ஆகவே, உயிர் நிற்கக் கூடிய உடம்பு ஒன்று மில்லை யென்பது பெறப்பட்டது. இங்ஙனம் இவ்வதிகாரத்தில், அரிதாய்க் கிடைத்தும் நிலையாத செல்வத்தின் நிலையாமையும் குழவிப்பருவம் முதல் கிழப்பருவம் வரை எந்நொடியிலும் திடுமென இறக்கும் யாக்கையின் நிலையாமையும், இறந்த பின்பும் எல்லையில்லாது துன்பமாலை தொடரும் பிறப்பிறப்பின் நிலையாமையுங் கூறித் துறவதி காரத்திற்குத் தோற்றுவாய் செய்து வைத்தார் 'ஒ' அசைநிலை.

மணக்குடவர்

தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)நிலையாமை (Nilaiyaamai)