குறள் (Kural) - 339

குறள் (Kural) 339
குறள் #339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

பொருள்
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

Tamil Transliteration
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi
Vizhippadhu Polum Pirappu.

மு.வரதராசனார்

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

கலைஞர்

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

பரிமேலழகர்

சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சாக்காடு உறங்குவது போலும் -ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை யொக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் அவன் மீண்டும் பிறத்தல் உறங்கினவன் திரும்ப விழிப்பதை யொக்கும். உயிர்கட்கு ஒரு தனித்த பிறவியில் உறக்கமும் விழிப்பும் மாறி மாறி வருவது போன்றே, தொடக்கமிலியாகவரும் பொது நிலைமையில் இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருவதும் இயல்பாம் என்பது கருத்து. ஆகவே வீடுபெறாத நிலையில், ஒரு பிறவியால் மட்டு மன்றிப் பலபிறவியாலும் நிலையாமை தோன்றி நிலைப்பதாம்.

மணக்குடவர்

உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)நிலையாமை (Nilaiyaamai)