குறள் (Kural) - 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
பொருள்
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
Tamil Transliteration
Thannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu
Innuyir Neekkum Vinai.
மு.வரதராசனார்
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.
கலைஞர்
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
பரிமேலழகர்
தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தன் உயிர் நீப்பினும்-ஓர் உயிரியைக் கொல்லாத வழித் தன்னுயிர் தன்னுடம்பினின்று நீங்கிவிடு மாயினும் ; தான் பிறிது இன்னுயிர் நீக்கும்வினை செய்யற்க தான் பிறிதோர் உயிரியின் இனியவுயிரை அதன் உடம்பினின்று நீக்கும் செயலைச் செய்யற்க. தன்னுயிரைக் காத்தற்குப் பிறிதோ ருயிரியைக் கொல்லும் நிலைமை மூன்றாம் அவை , தன்னைக் கொல்ல வந்த வுயிரியைக் கொல்லுதல், தன் நோய்க்கு மருந்தாக ஓர் உயிரியைக் கொன்று தின்னுதல், தன்னைக் கொன்றுவிடுமென்று நம்பி அதைத்தடுத்தற் பொருட்டு ஒரு பேய்த் தெய்வத்திற்குக் காவு கொடுத்தல் என்பன. இம் முந்நிலைமையிலுங் கொல்லாதிருக்க என்றார் திருவள்ளுவர். கொலை செய்தவழியும் உயிர் உலகத்தில் நிலையாதாகலானும், கொலையாற் கரிசும் கொல்லாமையால் அறமும் வளர்தலானும், கொல்வதினுங் கொலையுண்ணுதலே சிறந்ததென்பது கருத்து, 'பிறிதின்னுயிர்' என்றது இருதிணைக்கும் பொதுவாம்.
மணக்குடவர்
தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.
புலியூர்க் கேசிகன்
தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கொல்லாமை (Kollaamai) |