குறள் (Kural) - 328

குறள் (Kural) 328
குறள் #328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

பொருள்
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

Tamil Transliteration
Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk
Kondraakum Aakkang Katai.

மு.வரதராசனார்

கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா

வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

கலைஞர்

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

பரிமேலழகர்

நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும்-தேவரை நோக்கிச் செய்யும் வேள்வியிற் கொன்றால் இன்ப மாகுஞ் செல்வம் பெரிதாமென்று ஆரியர் கூறினும்; சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை-தமிழச் சான்றோர்க்குக் கொல்வதினால் வரும் செல்வம் மிக இழிவானதாம். 'எனினும்' என்னுஞ் சொல்லை "நல்லாறெனினுங் கொளல்தீது" (குறள்.222) என்பதிற்போற் கொள்க. நன்றாகும் ஆக்கமாவது விண்ணுலகத்தில் தேவராகத் தோன்றி நுகரும் இன்பம். வேள்வி வேட்டல் ஆரியர் வழக்கமேயாதலாலும், அதை எதிர்ப்பவர் தமிழரேயாதலாலும், ஆரியர் தமிழர் என்னுஞ் சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன. கடைக்கழகக் காலத்திலும் பின்பும் தமிழ வேந்தரும் ஆரிய வேள்வி வேட்டனரேயெனின், அவர் ஆரியப் பார்ப்பனரை நிலத்தேவரென்று நம்பித்தம் அறியாமையாலும் ஏமாற்றப்பட்ட நிலையிலும் செய்தமையால், அது தமிழ அறிஞரால் ஒப்புக்கொள்ளப் பட்ட தன்றென்று கூறி விடுக்க.

மணக்குடவர்

நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது

புலியூர்க் கேசிகன்

கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்று வரும் ஆக்கம் இழிவானதே யாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கொல்லாமை (Kollaamai)