குறள் (Kural) - 326

குறள் (Kural) 326
குறள் #326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

பொருள்
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

Tamil Transliteration
Kollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel
Sellaadhu Uyirunnung Kootru.

மு.வரதராசனார்

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

சாலமன் பாப்பையா

கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

கலைஞர்

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

பரிமேலழகர்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்- கொல்லாமையைக் கடைப்பிடித்து ஒழுகுபவனின் வாழ்நாள்மேல் உயிர் உண்ணும் கூற்றுச்செல்லாது - உயிரைக் கவரும் கூற்றுவன் செல்லமாட்டான். "இழைத்தநா ளெல்லை யிகவா பிழைத்தொரீஇக் கூற்றங் குதித்துய்ந்தா ரீங்கில்லை. என்பதே (நாலடி.6) உண்மையாதலால், உயிருண்ணுங் கூற்று வாழ்நாள் மேற் செல்லாதென்பது வாழ்நாள் நீடிக்கும் என்பதைக் குறிக்குமேயன்றி வேறன்று. வாழ்நாள் நீடிப்பதற்குக் கரணியம் (காரணம்) மரக்கறியுணவும் மனவமைதியும் மக்கள் நல்லெண்ணமும் இருக்கை வளிநிலைப் பயிற்சியும் அறவினைப் பயனும் இறைவன் திருவருளுளாம். வாழ்நாள் நீடிப்பதனால் துறவறத்திற்குரிய மெய்பொருளாராய்ச்சியும் ஓகப்பயிற்சியும் முதிர்ச்சி பெறும். "உடம்பா ரழியில் உயிரா ரழிவர் திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே." என்று திருமூலர் (திருமந்திரம், 724) கூறியதுங் காண்க. இனி, "நெடுநா ளிருந்தபேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண்ணாவர்" என்று தாயுமானவர் கூறுதலால், காயகற்பத்தினால் வாழ்நாள் நீடித்தலுமாம்.

மணக்குடவர்

கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கொல்லாமை (Kollaamai)