குறள் (Kural) - 325

குறள் (Kural) 325
குறள் #325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

பொருள்
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

Tamil Transliteration
Nilaianji Neeththaarul Ellaam Kolaianjik
Kollaamai Soozhvaan Thalai.

மு.வரதராசனார்

வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

சாலமன் பாப்பையா

வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

கலைஞர்

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

பரிமேலழகர்

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறவிநிலைமைக்கு அஞ்சி அதனின்று விடுதலை பெறும் பொருட்டு உலகப்பற்றைத் துறந்தவருளெல்லாம் ; கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை- கொலைவினைக் கஞ்சிக் கொல்லா வறத்தைக் கடைப்பிடிப்பவன் தலையாவான். பிறவி நிலைமையாவது எல்லாவுயிர்களும் இருதிணைப் பிறப்பிலும் எல்லையில்லாது பிறந்திறந்து பிறப்புப்பிணி மூப்புச் சாக்காட்டொடு வறுமையும் பசியும் பகையும் உடல் வருத்தமுங் கொண்டு வருந்துதல்.

மணக்குடவர்

மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.

புலியூர்க் கேசிகன்

வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கொல்லாமை (Kollaamai)