குறள் (Kural) - 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
பொருள்
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
Tamil Transliteration
Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Kollaamai Soozhum Neri.
மு.வரதராசனார்
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
சாலமன் பாப்பையா
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
கலைஞர்
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
பரிமேலழகர்
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நல் ஆறு எனப்படுவது யாது எனின்- பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழியென்று சொல்லப்படுவது எது என வினவின் யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி- அது எவ்வுயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறியாகும். "யாதொன்றும்" என்றது துறந்தாரை நோக்கி ஓரறிவுயிரையும் உட்படுத்தற்கு.
மணக்குடவர்
நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.
புலியூர்க் கேசிகன்
நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கொல்லாமை (Kollaamai) |