குறள் (Kural) - 323

குறள் (Kural) 323
குறள் #323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

பொருள்
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

Tamil Transliteration
Ondraaka Nalladhu Kollaamai Matradhan
Pinsaarap Poiyaamai Nandru.

மு.வரதராசனார்

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

சாலமன் பாப்பையா

உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

கலைஞர்

அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

பரிமேலழகர்

ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. '('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒன்றாக நல்லது கொல்லாமை- முதற்படியாக நல்லற மாவது கொல்லாமையே; அதன் பின்சார நன்று பொய்யாமை- அதற்கு அடுத்தபடியாக நல்லது வாய்மையாம். கொல்லாமையைப் பற்றிக் கூறவந்த விடத்துப் பொய்யாமையை ஏன் உடன் கூறினாரெனின், முன்பு வாய்மையதிகாரத்தில் "பொய்யாமை....தரும்". "பொய்யாமை....நன்று", "யாமெய்யா.....பிற". என்று வாய்மையைத் தலைமையாக் கூறியதொடு முரணுமாகலின் , முற்கூறியதை மட்டுப்படுத்தி இரண்டாந் தலைமையாக வரையறுத்தற்கென்க. அங்ஙனமாயின் வாய்மையதிகாரத்திற் கூறியது பொய்யாகாதோவெனின், ஆகாது; அங்குச் சொல்வடிவான அறங்களுள் வாய்மையையும் இங்குச் செயல்வடிவான அறங்களுள் கொல்லாமையையும் கூறி அவ்விரண்டையும் ஒப்பு நோக்கியவிடத்து மண்ணுலகில் மக்கட்கு மட்டுமுரிய வாய்மையினும் அறுவகையுயிர்கட்குமுரியதும் உயிரைக்காப்பதுமான கொல்லாமையைச் சிறந்ததாகக் கண்டமையின் என்க. இனி, கொலையும் செங்கோல் தண்டனையால் நன்மையாவதால் வாய்மை என்பது நன்மை செய்யும் பொய்யையுந் தழுவுவதாலும், தீமை செய்யின் பொய்யாக மாறுவதாலும், திரிபுள்ளதென்பது பொருந்தாது.

மணக்குடவர்

இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)கொல்லாமை (Kollaamai)