குறள் (Kural) - 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
பொருள்
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
Tamil Transliteration
Innaa Enaththaan Unarndhavai Thunnaamai
Ventum Pirankan Seyal.
மு.வரதராசனார்
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
கலைஞர்
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
பரிமேலழகர்
இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இன்னா எனத்தா னுணர்ந்தவை - இவை மக்கட்குத் தீங்கு விளைப்பன என நால்வகை அளவைகளாலும் தான் அளந்து அறிந்தவற்றை; பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்- பிறனிடத்துச் செய்தலைப் பொருந்தாமை துறந்தவனுக்கு வேண்டும். பட்டறிவாலும் உணர்ச்சியாலும் உண்மை யென்றறிந்தவற்றை 'உணர்ந்தவை' என்றார்.
மணக்குடவர்
தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.
புலியூர்க் கேசிகன்
துன்பம் தருவன எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | இன்னா செய்யாமை (Innaaseyyaamai) |