குறள் (Kural) - 317

குறள் (Kural) 317
குறள் #317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

பொருள்
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

Tamil Transliteration
Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam
Maanaasey Yaamai Thalai.

மு.வரதராசனார்

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

சாலமன் பாப்பையா

எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

கலைஞர்

எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

பரிமேலழகர்

மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மனத்தான் ஆம் மாணா- மனத்தோடு கூடிய தீய செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை- எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யா திருத்தல் தலைமையான அறமாம். மனத்தோடு கூடிய செயலாவது அறிந்து செய்யுஞ் செயல். மாணுதல் நன்றாதல். 'மாணா' பலவின் பால் எதிர்மறை விணையாலணையும் பெயர். வலிமையுள்ள காலத்தையும் உட்படுத்த 'எஞ்ஞான்றும்' என்றும் எளியாரையும் விலக்க 'யார்க்கும்' என்றும் "சிறு பொறி பெருந்தீ" யாதலானும் சிறுநஞ்சும் பெருந்தீங்கு செய்தலானும் சிறுவினையும் தீயது தீவினையே என்று கருதி எனைத்தானும் என்றும் கூறினார்.

மணக்குடவர்

யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.

புலியூர்க் கேசிகன்

எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)இன்னா செய்யாமை (Innaaseyyaamai)