குறள் (Kural) - 315

குறள் (Kural) 315
குறள் #315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

பொருள்
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

Tamil Transliteration
Arivinaan Aakuva Thunto Piridhinnoi
Thannoipol Potraak Katai.

மு.வரதராசனார்

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

சாலமன் பாப்பையா

அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.

கலைஞர்

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

பரிமேலழகர்

அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ, பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து? (குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை- பிறிதோ ருயிர்க்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்தன போலக் கருதிக் காவா விடத்து; அறிவினான் ஆகுவதுண்டோ- உயிர்களின் இயல்பைப் பற்றி அறிந்த அறிவினால் ஏதேனும் ஒரு பயனுண்டோ? இல்லை என்றவாறு. உயிர்களைப் பற்றி அறிந்த அறிவாவது; உயிர்கள் எழுவகைப் பட்டன என்பதும், அவை தொடக்கமிலியாகத் தத்தம் நல்வினை தீவினைக்கேற்ப நால்வகுப்பிற் பிறந்திறந்து துன்புற்று வருகின்றன என்பதும், அப்பிறவித் துன்பத்திற்கு இயல்பாக எல்லையில்லை யென்பதும், அத்துன்பத்தினின்று விடுதலை பெறும் வழி இறைவன் திருவருளைத்துணைக்கொண்டு இருவகை யறங்களுள் ஒன்றைத்தூய்மையாகக் கடைப் பிடித்தலே என்பதுமாம். இனி, பிறவுயிர்க்குத் துன்பம் வராமற் காத்தலாவது அஃறிணையில் இயங்கு திணையைச் சேர்ந்த நீர்வாழி, ஊரி, பறவை என்னும் மூவகையுயிர்களுள், கூர்ந்து நோக்கினாலொழியக் கண்ணிற்குப் புலனாகாத நுண்ணுயிரிகளுமிருப்பதால், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய நிலைகளிலும், உண்டல் பருகல் முதலிய வினைகளிலும், கருவிகள் கொண்டு செய்யும் பல்வேறு தொழிலகளிலும், அந்நுண்ணுயிரிகட்குச் சேதம் நேராதவாறு கவனித்து ஒழுகுதலாம். இதனாற் கவன மின்மையால் நேரும் இன்னா செயல் விலக்கப்பட்டது. பருவுடம் புள்ள பிறவுயிர்கள் தம்மைத்தாமே காத்துக்கொள்ளுமென்பதும், நுண்ணுயிரிகள் போல் எளிதாய்ச் சேதத்திற்குள்ளாகா என்பதும், கருத்தாம்.

மணக்குடவர்

பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.

புலியூர்க் கேசிகன்

பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பமே போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன் தான் ஏதும் உளதாகுமோ?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)இன்னா செய்யாமை (Innaaseyyaamai)