குறள் (Kural) - 314

குறள் (Kural) 314
குறள் #314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

பொருள்
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

Tamil Transliteration
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vital.

மு.வரதராசனார்

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

சாலமன் பாப்பையா

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

கலைஞர்

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

பரிமேலழகர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இன்னா செய்தாரை ஒறுத்தல்- தமக்குத்தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது அவர் நாண நல் நயம் செய்து விடல்- அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாம். பிறர் செய்த தீமைகளையும் தாம் செய்த நன்மையையும் நினைப்பின் மீண்டுந் தளிர்க்கு மாதலின் முற்றும் மறக்கற் பாலன வாயின.

மணக்குடவர்

இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.

புலியூர்க் கேசிகன்

துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)இன்னா செய்யாமை (Innaaseyyaamai)