குறள் (Kural) - 313

குறள் (Kural) 313
குறள் #313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

பொருள்
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

Tamil Transliteration
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum.

மு.வரதராசனார்

தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

கலைஞர்

யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

பரிமேலழகர்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்- தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமைகொண்டு தீங்கு செய்தவர்க்கும் துறவுபூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின்; உய்யா விழுமம் தரும்- அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத்தரும். துன்பமாவது தவமிழத்தலும் கரிசு(பாவம்) அடைதலும். துறவறத்தில் தீமைக்குத் தீமை செய்தலும் தீவினையாம்.

மணக்குடவர்

தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

ஏதும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)இன்னா செய்யாமை (Innaaseyyaamai)