குறள் (Kural) - 312

குறள் (Kural) 312
குறள் #312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

பொருள்
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

Tamil Transliteration
Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa
Seyyaamai Maasatraar Kol.

மு.வரதராசனார்

ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா

நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

கலைஞர்

சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

பரிமேலழகர்

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும்- ஒருவன் தம்மேற் கறுவுகொண்டு தீயவற்றைச் செய்தவிடத்தும்; மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்- திருப்பித்தாம் அவனுக்குத் தீயவை செய்யாமையும் குற்றமற்ற பெரியோர் கொள்கையாம். இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. இதனாற் பழிக்குப் பழி செய்யும் பகைமை பற்றி இன்னா செய்தல் விலக்கப்பட்டது.

மணக்குடவர்

தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,

புலியூர்க் கேசிகன்

கறுவுகொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)இன்னா செய்யாமை (Innaaseyyaamai)