குறள் (Kural) - 309

குறள் (Kural) 309
குறள் #309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

பொருள்
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

Tamil Transliteration
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin.

மு.வரதராசனார்

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

சாலமன் பாப்பையா

உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

கலைஞர்

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

பரிமேலழகர்

உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்- தவஞ் செய்வான் தன் மனத்தாற் சினத்தை ஒருபோதுங் கருதானெனின்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும்- அவன் பெறக்கருதிய பேற்றையெல்லாம் ஒருங்கே பெறுவான். 'உள்ளத்தால்' என்னும் மிகைச்சொல் அருள்பயின்ற வுள்ளம் என்பதை யுணர்த்தும். இம்மை மறுமை வீடென்னும் மூன்றும் அடங்க "உள்ளிய தெல்லாம்" என்றார். சினம் கருத்து வடிவில் இல்லையெனின் சொற்செயல் வடிவிலும் இராதென்பது கருத்து.

மணக்குடவர்

தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்,

புலியூர்க் கேசிகன்

ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெகுளாமை (Vekulaamai)