குறள் (Kural) - 310

குறள் (Kural) 310
குறள் #310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

பொருள்
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

Tamil Transliteration
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai.

மு.வரதராசனார்

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா

பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

கலைஞர்

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

பரிமேலழகர்

இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர். (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் , கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இறந்தார் இறந்தார் அனையர்- சினத்தின் கண் அளவுகடந்தவர் உயிரோடிருப்பினும் செத்தவரை யொப்பர்.சினத்தை துறந்தார் துறந்தார் துணை- சினத்தை முற்றும் விட்டவர் இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தா ரளவினராவர். 'சினத்தை .......துணை' என்பதற்கு, "சினத்தை துறந்தார் சாதற்றன்மையராயினும் அதனை யொழிந்தாரளவினர்... சினத்தை விட்டார்க்குச் சாக்கா டெய்து தற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடுபெறுதல் ஒரு தலையாகலின் அவரை வீடு பெற்றாரோடொப்ப ரென்றுங் கூறினார்" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது உயர்வாய்த் தோன்றினும் சற்று வலிந்து பொருள் கொண்டதாகும். 'சினத்தை' என்பது முன்னும் பின்னும் இசையும் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாம்.

மணக்குடவர்

சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.

புலியூர்க் கேசிகன்

அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெகுளாமை (Vekulaamai)