குறள் (Kural) - 308

குறள் (Kural) 308
குறள் #308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பொருள்
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

Tamil Transliteration
Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru.

மு.வரதராசனார்

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா

பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

கலைஞர்

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

பரிமேலழகர்

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - கொத்தான நாவுகளுள்ள பெருந்தீ வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று- அவனைச் சினவாமை கூடுமாயின் நன்றாம். தீமையின் மிகுதி தோன்ற 'இணரெரி' என்றும் தீவினைப்பன்மை தோன்ற 'இன்னா' என்றும் முற்றத்துறந்தவரும் பொறுத்தலருமை தோன்றப் 'புணரின்' என்றுங் கூறினார். சினத்தீ கனல் தீயினுங் கொடிது என்பது கருத்து.

மணக்குடவர்

தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும் கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று. மேல் வலியவன் பொறுக்க வேண்டுமென்றார் அவன் பொறுக்குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றார்.

புலியூர்க் கேசிகன்

பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன் பால் வெகுளாமையே நன்று

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெகுளாமை (Vekulaamai)