குறள் (Kural) - 307

குறள் (Kural) 307
குறள் #307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

பொருள்
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

Tamil Transliteration
Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru.

மு.வரதராசனார்

(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

கலைஞர்

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

பரிமேலழகர்

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு- சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் சிறந்த பண்பென்று பொருட்படுத்தி அதைக்கொண்டவன் கெடுதல். நிலத்து அறைந்தான் கை பிழையாத அற்று- நிலத்தின் கண் அறைந்தவன் கை தப்பாது நோவுதல் போன்றதாம். இங்குப் பொருள் என்றதைப் "பொருளல்லவரை பொருளாகச் செய்யும்" (751) என்பதிற் போலக் கொள்க.

மணக்குடவர்

சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

புலியூர்க் கேசிகன்

சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல் உறுதியாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெகுளாமை (Vekulaamai)