குறள் (Kural) - 304

குறள் (Kural) 304
குறள் #304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

பொருள்
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

Tamil Transliteration
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira.

மு.வரதராசனார்

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

சாலமன் பாப்பையா

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

கலைஞர்

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

பரிமேலழகர்

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(இ-ரை) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்தெழுகின்ற சினமல்லாது; பிறபகையும் உளவோ - வேறுபகைகளும் உண்டோ? இல்லை. சினத்தின் நீட்சியே பகையாதலானும் புறப்பகையில்லாத துறவியர்க்கும் சினம் அகப்பகையாய் அமைந்து பிறவித்துன்பத்தைப் பயத்தலானும், சினத்தின் வேறான பகை யில்லையாயிற்று.

மணக்குடவர்

நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.

புலியூர்க் கேசிகன்

முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெகுளாமை (Vekulaamai)