குறள் (Kural) - 305

குறள் (Kural) 305
குறள் #305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

பொருள்
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

Tamil Transliteration
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam.

மு.வரதராசனார்

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

சாலமன் பாப்பையா

தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

கலைஞர்

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

பரிமேலழகர்

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தான் தன்னைக் காக்கின் சினம் காக்க- ஒருவன் தனக்குத் துன்பம் நேராமற் காக்க விரும்பினானாயின் தன் மனத்திற் சினம் வராமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின் அச்சினம் தன்னையே கெடுக்குங் கடுந்துன்பங்களை வருவிக்கும். இல்லறத்தார்க்குச் சினக்கப்பட்டவரால் தீங்கு நேர்தலாலும், துறவறத்தார்க்கு அவர் சினம் அவர் தவப்பயனைக் கெடுத்துப் பிறவித் துன்பத்தையும் அடைவித்தலாலும், 'தன்னையே கொல்லும் சினம்' என்றார். கொல்லுதல் இங்குக் கொல்லுதல்போல் துன்புறுத்தல், "கரும்புபோற் கொல்லப் பயன்படுங்கீழ்" (குறள்-1078) என்பதிற் போல.

மணக்குடவர்

ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது

புலியூர்க் கேசிகன்

ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்று விடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெகுளாமை (Vekulaamai)