குறள் (Kural) - 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
பொருள்
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
Tamil Transliteration
Maraththal Vekuliyai Yaarmaattum Theeya
Piraththal Adhanaan Varum.
மு.வரதராசனார்
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
கலைஞர்
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
பரிமேலழகர்
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் – எத்தகையோரிடத்தும் சினங்கொள்ளுதலைக் கருதுவதுஞ் செய்யற்க; அதனான் தீய பிறத்தல் வரும் – அதனால் பல்வகையான தீமைகள் உண்டாகும். வலியார், ஒப்பார், எளியார் என்னும் முத்திறத்தாரும் அடங்க “யார்மாட்டும்” என்றார். உடனேயும் வெளிப்படையாகவும் தீங்கு செய்ய இயலாத எளியோரும் உள்ளத்தில் வயிரங்கொள்ளின், உறக்க நிலையிலும் மயக்க நிலையிலும் தனித்த நிலையிலும் வலியார்க்குத் தீங்கு செய்யத் துணிவாராதலானும், சினங்கொள்ளுதலும் அதனால் தீயன செய்யக் கருதுதலும் தூய உள்ளத்தராயிருக்கவேண்டிய துறவியர்க்குப் பொருந்தாமையானும், “தீயபிறத்த லதனாள் வரும்” என்றார். “மறத்தல்’ தல்லீற்று வியங்கோள்.
மணக்குடவர்
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வெகுளாமை (Vekulaamai) |