குறள் (Kural) - 299

குறள் (Kural) 299
குறள் #299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

பொருள்
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

Tamil Transliteration
Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup
Poiyaa Vilakke Vilakku.

மு.வரதராசனார்

புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

கலைஞர்

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

பரிமேலழகர்

எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே. (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கல்ல - ஆன்றவிந்தடங்கிய துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா, பொய்யா விளக்கே விளக்கு - அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம். புறவிருள் போக்கும் விளக்குகள் கதிரவன், நிலா, தீ என்பன. இவைபொய்யாமைபோல் அகவிருள் போக்காமையின், 'பொய்யாவிளக்கே விளக்கு' என்றார். அகவிருள் அறியாமை. 'பொய்யா' ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். பொய்யாமையாகிய விளக்கு என்பது உருவக வணி. முந்திய குறளில் வாய்மை அகத்தழுக்கைப் போக்குவதென்ற கருத்துட்கொண்டு, அதற்கேற்ப வாய்மையை விளக்காக உருவகித்தார்.

மணக்குடவர்

சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும். இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

புறவிருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே அவற்றினும் சிறந்த விளக்காகத் தோன்றும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாய்மை (Vaaimai)