குறள் (Kural) - 300

குறள் (Kural) 300
குறள் #300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

பொருள்
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

Tamil Transliteration
Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum
Vaaimaiyin Nalla Pira.

மு.வரதராசனார்

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா

சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

கலைஞர்

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

பரிமேலழகர்

யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள், எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை. (மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

யாம் மெய்யாக் கண்டவற்றுள்- யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எனைத்து ஒன்றும் - எவ்வகையிலும்; வாய்மையின் நல்ல பிற இல்லை- மெய்ம்மைபோலச் சிறந்த அறங்கள் வேறில்லை. 'மெய்யா' என்பதில் ஆக என்னும் வினையெச்ச வீறு 'ஆ' எனக் கடைக்குறைந்து நின்றது. வாய்மை தலைமையான அறமாகச் சொல்லப்பட்டிருப்பதால், 'வாய்மையின்' என்பதிலுள்ள 5-ஆம் வேற்றுமையுருபு தனக்குரிய உறழ்ச்சிப் பொருளில் வராது 2-ஆம் வேற்றுமைக்குரிய ஒப்புப் பொருளில் வந்ததாகக் கொள்க.

மணக்குடவர்

யாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை. இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாய்மை (Vaaimai)