குறள் (Kural) - 298

குறள் (Kural) 298
குறள் #298
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

பொருள்
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

Tamil Transliteration
Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai
Vaaimaiyaal Kaanap Patum.

மு.வரதராசனார்

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

கலைஞர்

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

பரிமேலழகர்

புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். "(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும்- உள்ளத்தூய்மை வாய்மையால் அறியப்படும். புறந்தூய்மை அழுக்குப் போதல்; அகத்தூய்மை குற்றம் நீங்குதல். காணப்படுதல் அறியப்படுதல். காணுதல் என்றது அகக் கண்ணாற் காணுதலை. புறத்தழுக்கும் நீரும் போல அகக் குற்றமும் வாய்மையும் காட்சிப் பொருளன்மையின், அறியப்படும் என்றார். வாய்மையால் அகத்தூய்மை உண்டாகும் வகை மேற் கூறப்பட்டது. துறவியர்க்குப் புறந்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்ததென்பாம்.

மணக்குடவர்

உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.

புலியூர்க் கேசிகன்

புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாய்மை (Vaaimai)